உலகத்துக்கே அச்சுறுத்தலை விளைவித்து வரும் பிளாஸ்டிக் உற்பத்தியை சர்வதேச நாடுகள் வெகுவாக குறைக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 3 மடங்கு அதிகமாகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் மனிதனின் வெற்றிகரமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக பிளாஸ்டிக் இருந்து வருகிறது. 1950ஆம் ஆண்டுவாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக், தற்போது மனித வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறிவிட்டது. மனிதனின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு பயன்களை கொண்டிருந்தாலும் இதனால் ஏற்படும் பாதிப்பு உலகை புரட்டிப்போடும் அளவிற்கு உள்ளது.
கடந்த 1950ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சுமார் 850 கோடி மெட்ரிக் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மக்கும் தன்மையற்றவையாக உள்ள இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளுக்கு சென்று நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களாக நுணுங்கிவிடும். அந்தத் துகள்கள் கடைசியில் கடல்வாழ் உயிர்களால் உட்கொள்ளப்படுகின்றன.
உலக நாடுகள் தடுக்காவிட்டால்...
கடலில் கலக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் ஏராளாமான கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன.
இதனிடையே நிலைமையின் தீவிரத்தை தற்போது சிறிதளவு உணர்ந்துள்ள உலக நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாடு குறைப்பு மறு சுழற்சி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக உலகின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் இதனை உலக நாடுகள் தடுக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக்கின் அளவு 3 மடங்கு அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தெரிவித்துள்ள சர்வதேச திடக்கழிவு சங்கம் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், ஆசியாவின் தொலைதூர கடற்கரைகளில் முகக்கவசங்கள் மற்றும் லேடெக்ஸ் கையுறைகள் தினமும் குப்பைகளாக சேறுகின்றன. உலகெங்கிலும் உள்ள நிலப்பரப்புகள் பதிவுசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உணவுப் பாத்திரங்கள் மற்றும் ஆன்லைன் விநியோக பேக்கேஜிங் கவர்கள் மூலம் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் உலகின் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு உடனடியாக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் கடலுக்குள் செல்லும் பிளாஸ்டிக்கின் அளவு 11 மில்லியன் டன்னிலிருந்து 29 மில்லியன் டன்னாக உயரும், இது 2040 ஆம் ஆண்டில் 600 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் பெருகும், இது 3 மில்லியன் நீல திமிங்கலங்களுக்கு சமமான எடை ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் மாசுபாடு என்பது அனைவரையும் பாதிக்கும் ஒன்று. இது ‘உங்கள் பிரச்சினை அல்ல, எனது பிரச்சினை அல்ல’. இது ஒரு நாட்டின் பிரச்சினை அல்ல. இது அனைவரின் பிரச்சினையாகும் ”என்று ஒரு மூத்த மேலாளரும் ஆய்வின் இணை ஆசிரியருமான வின்னி லாவ் கூறினார்.
ஆனால் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பது தடுக்கப்பட வேண்டும் என்றால் பிளாஸ்டிக் உற்பத்திக்கு முதலீடு செய்யப்பட்ட்டுள்ள நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை மாற்றுப் பொருட்கள் கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் வசதிகள் மற்றும் வளரும் நாடுகளில் கழிவு சேகரிப்பு விரிவாக்கம் ஆகியவையை மேம்படுத்தினால் 2040ம் ஆண்டுக்குள் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை 7% தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை 80% குறைக்க, வேண்டும் என்றால் ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு (single use plastic) பதிலாக காகிதம் அல்லது மாற்று வழிமுறைகள் தேவைப்படும், மேலும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் பங்கை விட இரண்டு மடங்கு அதிகமாக பேக்கேஜிங் மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.