மருத்துவப் படிப்பில் இந்திய அளவிலான இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி மூன்று மாதத்தில் முடிவெடுக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக, பாமக, விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்துவந்தது.
இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம். ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், “மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் மட்டுமே பிறப்பிக்க முடியும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை நிராகரித்தனர்.
மேலும், மருத்துவ கவுன்சில் விதிகளில், மாநில இட ஒதுக்கீடு பின்பற்ற கூடாது என எந்த விதிகளும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கல்வி நிலையங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க, சட்ட ரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என்று குறிப்பிட்டனர்.
“ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசால் நிறைவேற்ற முடியும். 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும். மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களை பெற்றபோது, அவற்றில் மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களில் ஆட்சேபிக்க முடியாது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு கூடாது என எந்த விதிமுறையும் இல்லை. ” என்று குறிப்பிட்டனர்.
மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருகு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, கலந்தாலோசித்து, இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுத்து, 3 மாதங்களில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றம் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து அளித்த தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இந்த தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி ட்விட்டரில், “சமூகநீதி காத்த ஜெயலலிதா ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் தமிழக அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூக நீதிக்கான வெற்றி என்றும் இதில் மத்திய அரசு மேல்முறையீடு செய்யாது என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து அளித்துள்ள தீர்ப்பு பற்றி சமூக நீதி வரலாற்றில் இது ஒரு பொன்னாள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், நான்கு ஆண்டுகளாக BC & MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகமே ஓரணியில் நிற்கும். மேல்முறையீடு தவிர்த்து உடனே இடஒதுக்கீடு வழங்குக என்று வலியுறுத்தியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீதிமன்றத்தின் சிறப்புமிக்க தீர்ப்பைப்பெற்று BC, MBC மாணவர்களின் இட ஒதுக்கீட்டை பறிக்கும் சூழ்ச்சியை முறியடித்துள்ளது கழகம். இது சமூகநீதியின் தாய்மடியான திராவிட இயக்கம் வழி வந்த நம் தலைவர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சிக்கு கிடைத்த வெற்றி.” என்று தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% வழங்க விரைந்து சட்டமியற்ற வேண்டும். அத்துடன், SC- 18%; ST-1% – என இடஒதுக்கீடு வழங்கவும் மோடிஅரசு ஆவன செய்யவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.