அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
ஏப்ரல் 2ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து 6 பேர் மாநிலங்களவைக்கு தேர்வாகினர். இவர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி மாநிலங்களவையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தமிழில் உறுதி மொழி எடுத்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாமக ஜி.கே.வாசன், தமிழகத்துக்கான திட்டங்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன் என உறுதி அளித்தார்.
மேலும், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக் விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே, பாஜக சார்பில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் பதவியேற்றனர். இன்று பதவி ஏற்காத உறுப்பினர்கள் மழைக்கால கூட்டத்தொடரின் போது பதவியேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.