செவ்வாய், 28 ஜூலை, 2020

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - திமுக தோழமை கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

Image

நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என திமுக தோழமை கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கொரோனா விவகாரம், இட ஒதுக்கீடு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கொரோனா மரணங்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், வாழ்வாதாரத்தை மீட்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும் தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020ஐத் திரும்பப் பெற வேண்டும் எனவும், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து உடனே ஒரு கமிட்டி அமைத்து, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.