செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

கறுப்பு பணம், விலைவாசி உயர்வு…நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்த கனிமொழி

1 8 2022 

கறுப்பு பண புழக்கம் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி இன்று உரையாற்றினார். அப்போது பாஜக எம்.பிக்கள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கனிமொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மகளிரணி தலைவியுமான கனிமொழி உரையாற்றினார். கடந்த 2016ம் ஆண்டு கறுப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி மத்திய பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார். இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், தமிழ்நாட்டில் 50,000 சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாக அப்போதைய அதிமுக அரசின் கொள்கை விளக்க குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த பணமதிப்பிழப்பு நடலடிக்கையால்,  பல உயிர்கள் பலியானதாக குறிப்பிட்ட கனிமொழி. கறுப்பு பணம்  ஒழிக்கப்படும் என்கிற நம்பிக்கையில்தான் அத்தனை இன்னல்களையும் பொதுமக்கள் தாங்கியதாகக் கூறினார். ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னரும் கறுப்பு பண நடமாட்டம் இருப்பது எப்படி என அவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது பாஜக உறுப்பினர்கள் கனிமொழியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, திமுக எம்.பி. தயாநிதி மாறன்  உள்ளிட்டோர் கனிமொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். கனிமொழி எம்.பியின் பேச்சுக்கு இடையூறாக பாஜக எம்.பிக்கள் கோஷமிட்டதை கண்டித்தனர்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, அத்யாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றத்தையும், பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் பட்டியலிட்டார். பென்சில், ரப்பர் விலைகூட ஏறிவிட்டதாக பிரதமர் மோடிக்கு பள்ளிக் குழந்தை எழுதிய கடிதம் ஒன்றை அவையில் கனிமொழி படித்துக்காட்டினார். அப்போதும் கனிமொழி பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தக்காளி, வெங்காயம் விலை குறைந்துவிட்டதாக பாஜக எம்.பி.ஒருவர் பேசியதற்கு பதிலடி கொடுத்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தக்காளி, வெங்காயம் விலை மட்டும் குறைந்துவிட்டால் போதுமா, மூன்று வேளையும் சட்டினி அரைத்து சாப்பிட்டு பசியாற முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.  இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்பவர்கள் மாதம் ஒன்றுக்கு பெட்ரோலுக்காக மட்டும் 15 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாக கூறிய கனிமொழி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.  விலைவாசி உயர்வு குறித்து இப்படி பல்வேறு புள்ளி விபரங்களைக் கூறி கனிமொழி பேசியதை சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்று பாராட்டினர். அதே நேரம் பாஜக உறுப்பினர்கள் திமுக எம்.பி. கனிமொழி பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டேயிருந்தனர். அதனால் மக்களவையில் சலசலப்பு நிலவியது.

source https://news7tamil.live/kanimozhi-speech-in-lok-shaba-about-price-rise.html