2 8 2022
அணு ஆயுதப் போர் யாருக்கும் வெற்றியைத் தராது என்றும் எனவே அது தொடங்கப்படக்கூடாது என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போரிட்டு வருகிறது. இதனால், அணு ஆயுதப் போர் குறித்த பேச்சு உலகில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்த மாநாட்டுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் தனது உரையை வழங்கியுள்ளார். அதில், உண்மையின் அடிப்படையில் நாம் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அணு ஆயுத போர் யாருக்கும் வெற்றியைத் தராது என்பது உண்மை என தெரிவித்துள்ள அவர், எனவே, அணு ஆயுதப் போர் தொடங்கப்படக்கூடது என்றார்.
சமமான, பிரித்துப் பார்க்க முடியாத பாதுகாப்பை அனைத்து நாட்டு மக்களும் பெற வேண்டும் என்பதில் ரஷ்யா உறுதியாக இருப்பதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பேச்சு, உக்ரைன் போர் தீவிரமடைந்தாலும் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தாது என்ற உத்தரவாதத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதையே காட்டுகிறது என சர்வதேச நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், புடினின் இந்த பேச்சு அவர் ஏற்கனவே கூறியதற்கு முரணாக இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
உக்ரைனுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 24ம் தேதி தாக்குதல் தொடங்கியபோது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் அவர் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். உக்ரைன் விவகாரத்தில் எந்த ஒரு நாடாவது தலையிட்டால் அந்த நாடு அதன் வரலாற்றில் சந்தித்திராத பேரழிவை சந்திக்கும் என்று அப்போது அவர் எச்சரித்திருந்தார். அணு ஆயுத தாக்குதலுக்கும் ரஷ்யா தயாராக இருப்பதையே அவர் பேச்சு உணர்த்துவதாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், அணு ஆயுதத்துக்கு எதிரான விளாதிமிர் புடினின் பேச்சு சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
source https://news7tamil.live/there-can-be-no-winners-in-a-nuclear-war-it-should-never-be-unleashed-vladimir-putin.html