
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 14 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தலைக் கவசம் அணியாததால், 4,730 இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின் இருக்கையில் இருந்தவர்களும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை விதிகளை மீறியதாக கடந்த 10 மாதங்களில் 86, 873 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வாகன விற்பனை மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த மாதம் மட்டும் இரு சக்கர வாகன விற்பனை நிலையங்களில் 485 சாலை பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 2016ம் ஆண்டோடு ஒப்பிடும் போது 525 குறைவு என்றும், உயிரிழப்புகளை குறைக்க சாலை விதிகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் பொதுமக்களை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.