
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சதி உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேகர் ரெட்டி வீட்டில் கிடைத்தது போல் வைரம், வைடூரியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்று எண்ணி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளார்கள் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வருமான வரித்துறையின் சோதனைக்கும், தமிழக அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தமிழக அமைச்சர் டி. ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் அனுமதி பெற்று வருமான வரித்துறை இந்த சோதனையை நடத்தியுள்ளதாகவும், இதுபோன்ற சமயங்களில் வருமான வரித்துறை மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். வருமான வரித்துறையின் இந்த சோதனைக்கு சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்குவிப்பே காரணம் என்றும் அமைச்சர் டி. ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.