செவ்வாய், 21 நவம்பர், 2017

​டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் November 21, 2017

Image

டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.நகரில் 45 ஆயிரத்து 890 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி ஓராண்டாக காலியாக உள்ள நிலையில் இடைத்தேர்தலை நடத்த தாமதப்படுத்துவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்னும் எத்தனை நாள்கள் தாமதப்படுத்துவீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதற்கான அறிவிப்பானையை டிசம்பர் 1-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

உடனடியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கலாம் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், போலி வாக்காளர்கள் நீக்கம் தொடர்பான விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கி விட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.