செவ்வாய், 21 நவம்பர், 2017

சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் மெகா ரெய்டு நடத்தியது ஏன்? November 21, 2017

Image

வரி ஏய்ப்பு குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்த பின்னரே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இந்த சோதனையின் போது, சசிகலாவின் நான்கு அறைகள் மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் ஒரு அறையிலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தப்படவில்லை எனவும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. 

மொத்தம் 180 இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூலம் ஐந்து நாட்கள் சோதனை நடத்தப்பட்டதாகவும் வருமான வரித்துறை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனையில், 70க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது. 

சோதனையின்போது, கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் பென்டிரைவ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தேவைப்பட்டால் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. 

சோதனை நடத்துவதற்காக, இளவரசியின் மகள் ஷகிலாவிடம் இருந்து ஜெயலலிதாவின் வீட்டு சாவி பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு, காவல்துறையினரின் உதவியே போதுமானதாக இருந்ததாகவும், அதனால் துணை ராணுவத்தை அழைக்கவில்லை எனவும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.