
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பிறமாநிலத்தவர் பங்கேற்க அனுமதி அளித்ததற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகம், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், வெளி மாநிலத்தவரும் போட்டித் தேர்வில் பங்கேற்க விதிகளில் திருத்தம் செய்திருப்பது, முற்றிலும் நியாயமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், வேலையின்றித் தவிக்கும் தமிழக இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில், அரசுத் துறை மற்றும் தனியார் துறைகளில் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரிப்பது, அசாம் மாநிலத்தில் எழுந்த பிரச்சினைபோல் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் வெடிக்கும் எனவும் வைகோ எச்சரித்துள்ளார். எனவே, டி.என்.பி.எஸ்.சி., விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.