
சென்னையில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை பற்றி பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. மாடிக்கு மாடி தாவி சென்று வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம், அந்த நபர் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.
சென்னையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை, கத்திமுனையில் மர்மநபர் ஒருவர் பாலியல் பலாத்காரம், நகை பறிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
விசாரணையில், கிண்டி மடுவின்கரை பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்ற இளைஞனே, இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, புழல் சிறையில் அறிவழகன் அடைக்கப்பட்டான். சிறையில் அடைக்கப்பட்ட அறிவழகன் பற்றி தற்போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
2 மாதங்களுக்கு முன்பே, அறிவழிகனின் செயல்கள் குறித்து, ஈக்காட்டுத்தாங்கல் பகுதி மக்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மேலும், வீடுகளுக்கு சென்று வந்த சி.சி.டி.வி.காட்சிகளுடன் போலீசாரிடம் புகாரும் அளித்திருக்கிறார்கள். ஆனால், அப்போதே அறிவழகனை கைது செய்ய போலீசார் முனைப்புக்காட்டவில்லை என கூறப்படுகிறது.
குரங்கு மனிதன் என கூறப்படும் இவன், ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்கு குரங்கு போல் தாவி தாவி, தனியாக இருக்கும் பெண்களிடம் தனது சேட்டைகளை காட்டி வந்துள்ளான். சென்னையில் அறிவழகனால் சுமார் 50 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தாம் 25 பெண்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளான் அறிவழகன்.
பாலியல் பலாத்காரம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதனை செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டு, அதனை காட்டி மிரட்டி, மீண்டும், மீண்டும் பாலியல் இச்சையை தீர்த்து வந்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
பாலியல் பலாத்காரம், வழிப்பறி, கொலை மிரட்டல் என 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் அறிவழகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து, அறிவழகனை, காவலில் எடுத்து விசாரித்தால், பல உண்மைகள் தெரிவரும் என்ற அடிப்படையில், போலீசார் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.