
எந்தெந்த வழக்குகளில் சசிகலா குடும்பத்தினர் யார், யாரெல்லாம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்பது குறித்து, இப்போது காணலாம்...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 1996ம் ஆண்டு, வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1994ம் ஆண்டு வெளிநாட்டு கார் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக, சசிகலாவின் கணவர் நடராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுக்ள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சசிகலா சகோதரி வனிதாமணியின் மருமகன் எஸ்.ஆர். பாஸ்கரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
1997ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் ஸ்ரீதலா தேவி மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1997 ம் ஆண்டு, அந்நிய செலாவணி மோசடி செய்ததாக, டிடிவி பாஸ்கரன் மீது வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
2001ம் ஆண்டு, அந்நிய செலாவணி மோசடி செய்ததாக, டிடிவி தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த டிடிவி தினகரன் மீது இந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.