காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரி மூல வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கர்நாடக அரசு நடப்பாண்டிற்கு 60 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும்படி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
ஆனால் காவிரி மூல வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய மனு தாக்கல் செய்யும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.
மேலும் தீர்ப்பு வரும் வரை தமிழகத்திற்கு தினமும் இரண்டாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் அவ்வாறு வழங்கப்படுகிறதா என்றும் அவ்வாறு வழங்கப்பட்டால் தமிழக அரசு ஏன் 60 டிஎம்சி தண்ணீர் கேட்டு புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பினார்.
தண்ணீர் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்குமாறும் அங்கிருந்த கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமனுக்கு நீதிபதி வாய்மொழி உத்தரவு வழங்கினார்.