ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் இருப்பதாக, உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க கீழ்மட்ட அளவில் துறை வாரியாக அதிகாரிகள், நிபுணர்கள், தன்னார்வ அமைப்புகள் அடங்கிய பேரிடர் மேலாண்மை குழுவை அமைக்க கோரி சூர்ய பிரகாசம், டிராபிக் ராமசாமி , வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கால்வாய், ஆற்றோரங்களில் ஆக்கிரமிப்பதால் தான், வெள்ளம் புகும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் மீண்டும் அப்பகுதில் ஆக்கிரமிப்பாளர்கள் வந்து விடுகின்றனர் அவர்களை அகற்ற முடியவில்லை எனவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அப்படியெனில் காவல்துறை துணையுடன் நடவடிக்கை எடுக்கலாமே எனவும் வெள்ள நீரை அகற்ற வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்ட இயந்திரங்கள் எங்கே எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து தலைமை நீதிபதி, 1913 என்ற அவசர கால எண் இயங்குகிறதா என்பதை உதவியாளர் மற்றும் வழக்கறிஞர் மூலமும் சோதித்தார். மேலும் அரசு நிர்வாகத்தை ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் நடத்த முடியாது எனவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், வெள்ள பாதிப்பை சரி செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 10ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் நீர் தேக்கம் ஆக்கிரமிப்பாளர் மீதான நடவடிக்கை, மழைநீர் கால்வாய் பராமரிப்பு , நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.