சனி, 4 நவம்பர், 2017

​ஜெயலலிதா கைரேகை சர்ச்சை - மருத்துவர் முன்னுக்குப்பின் முரணான சாட்சி! November 4, 2017

Image

ஜெயலலிதா கைரேகை வழக்கில் மருத்துவர் பாலாஜி முன்னுக்கு பின் முரணாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப் பேரவை இடைத்  தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையப் படிவங்களில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதில் கைரேகை இடம் பெற்றது.

ஆனால், இதில் சந்தேகம் இருப்பதாகவும், திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்தும் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகை வைத்ததாக சான்றளித்த மருத்துவர் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற போது சசிகலா உடன் இருந்ததாகவும், அடையாறில் தனக்கு சொந்தமாக மருத்துவமனை இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதி வேல்முருகன் முன் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மருத்துவர் பாலாஜி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற போது அந்த அறையில் சசிகலா இல்லை என்று தெரிவித்தார். மேலும், அடையாறில் தனது மகன் அபினவ் பெயரில் சொந்தமாக மருத்துவமனை இருப்பதாகவும் கூறினார். ஜெயலலிதாவின் கைரேகையை சான்றளிக்க சுகாதாரத் துறை செயலாளரிடமோ அல்லது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனிடமோ அனுமதி பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதால் ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தாரா என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். கைரேகை வாங்கப்பட்ட ஆவணத்தின் தேதியில் திருத்தம் ஏதும் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு "ஆமாம்" என மருத்துவர் பாலாஜி பதிலளித்தார். 
இதையடுத்து, இந்த வழக்கு நவம்பர் 10 ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, முன்னுக்குப் பின் முரணாக சாட்சியம் அளித்ததால், மருத்துவர் பாலாஜியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்ய இருப்பதாக மனுதாரர் சரவணன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.