
ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் உள்ளிட்ட ரயில்களில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களின் முகங்களை வீடியோ எடுத்து அதனை பயண அட்டை புகைப்படத்துடன் ஒப்பிட்டு ரயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்த நிலையில், இனி ரயில் படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணித்தால் அவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், திருவள்ளூரை தொடர்ந்து தற்போது சென்னையிலும் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.