புதன், 17 ஜனவரி, 2018

OnePlus' மொபைல் இணையதளத்தின் மூலம் கிரெடிட் கார்டு பணமோசடித் திருட்டு! January 16, 2018

Image

இந்திய மொபைல் சந்தையில் ‘OnePlus' மொபைல்கள் மிகப்பிரபலமானவையாக இருக்கின்றன. இணைய சேவையைப் பயன்படுத்தி எளிதாக வாங்கும் நிலையில் இருப்பதாலும், செல்போனைக் குறித்து வரும் ‘பாஸிட்டிவான’ விமர்சனங்கள் காரணமாகவும் செல்போன் சந்தையில் OnePlus செல்போன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில், இணையத்தில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி நேரடியாக OnePlus செல்போன்களை வாங்கும் போது குறிப்பிட்ட கிரெடிட் கார்டிலிருந்து பணம் திருடப்படுவதாகவும், மோசடிகள் நடைபெறுவதாகவும் புகார்கள் வரத்துவங்கியுள்ளன.
கிரெடிட் கார்டு சேவையைப் பயன்படுத்தி OnePlus இணையதளத்தில் செல்போன் வாங்கிய ஒருசில நாட்களில் முறைகேடான வழியில் கிரெடிட் கார்டுகளிலிருந்து பணம் திருடப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். OnePlus நிறுவனம் தங்களுடைய பரிவர்த்தனைகளுக்காக மற்ற இடைத்தரகு நிறுவனங்களைப் பயன்படுத்தாமல் நேரடியான இணையப்பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது. இதனால், கிரெடிட் கார்டு மோசடிகளுக்கு நேரடியாக பதில் சொல்லவேண்டி வந்துள்ள அந்நிறுவனம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.

இன்னொருபுறம் OnePlus இணையதளத்தைப் பற்றிக்குறிப்பிடும், இணைய ஆய்வாளர்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் இணையதளத்திற்கு இருக்கவேண்டிய பாதுகாப்பு வசதிகள் OnePlus இணையத்தில் இல்லை எனவும், இதனால் ‘ஹேக்கர்கள்’ எளிதில் மோசடி செய்ய வசதியாக உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கிரெடிட் கார்டு மோசடிகள் குறித்த புகார்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அந்த இணையதளத்தில் செல்போன் வாங்குவதற்காக பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இணையதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.