வியாழன், 17 ஜனவரி, 2019

பிளாஸ்டிக் தடைக்கு பின் புத்துயிர் பெற்ற பேப்பர் கவர்கள்! January 17, 2019

Image

பிளாஸ்டிக் தடைக்குப் பின்னர், பழைய பேப்பரில் செய்யப்படும் கவர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பேப்பர் கவர் ஈரமாகி பொருட்களின் தன்மை மாற வாய்ப்புள்ளதாக நுகர்வோர் கருதுகின்றனர்.

நுகர்வோரின் இந்த சிரமத்தைப் போக்குவதற்காக, கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு பகுதியை சேர்ந்த ரப்பர் விவசாயி பாபு என்பவர், ஒரு ரூபாய்க்கும் குறைந்த விலையில் சாதாரண செய்தித் தாளில் மேற்பூச்சு தடவி, ஈரத்தால் பாதிக்காத வகையில் கவர் செய்திருக்கிறார்.

இரண்டு மணி நேரம் வரை, ஈரமான பொருட்களை இந்தக் கவரில் வைத்து எடுத்துச் செல்ல முடியும் என்றும், அதுவரை ஈரத்தால் பேப்பர் கிழிந்து விடாது என்றும், கூறுகிறார் பாபு. இந்த புதிய வகை பேப்பர் பைகளுக்கு மீன் சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய தொழில்நுட்பத்திலான பேப்பர் கவருக்கு காப்புரிமைக்கு விண்ணப்பத்திருப்பதாகவும், அரசு ஆய்வு செய்து அனுமதி அளித்த பின்பு, சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாகவும், பாபு தெரிவித்துள்ளார்.

நெகிழி பைகளுக்கு மாற்றாக இந்த புதிய பேப்பர் கவர் விற்பனைக்கு, அரசு ஆதரவளிக்க வேண்டும் என்பதே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

source ns7.tv