Authors
ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் தங்களது அடுத்த அறிவிப்புகளை வெளியிடும் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக “Fuchsia” என்னும் புதிய இயங்குதளம் ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்து அமைதிக்கான பின்னணியை உடைத்திருக்கிறது கூகிள்.
இந்த புதிய இயங்குதளமானது கூகிளின் தற்போதைய இயங்குதளங்களான ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த இயங்குதளமானது முதலில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக மொபைல் போன் மற்றும் டேப்லட் உள்ளிட்டவற்றிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த பணிக்காக ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் பில் ஸ்டிவன்சனை பணிக்கு அமர்த்தியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் கூகிளில் இணையும் ஸ்டீவன்சன் “Fuchsia” உருவாக்கத்தில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
பில் ஸ்டீவன்சன், ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளமான OS X ன் release engineer ஆக பணியாற்றியுள்ளதோடு, மற்ற இயங்கு தளங்களான லயன் முதல் மோஜாவே வரையிலான உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
இந்த, புதிய இயங்குதளம் பயன்பாட்டுக்கு வர இன்னும் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகும் என்றும், ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு மாற்றாக இந்த புதிய இயங்குதளத்தை வெளியிடும் வேலைகளில் கூகிள் நிறுவனம் ஏற்கனவே இறங்கிவிட்டதாகவும், ஆண்ட்ராய்ட் போனில் நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆப்கள் Fuchsia” விலும் இயங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“Fuchsia” என்பது அமெரிக்கா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் காணப்படும் ஒருவகை தாவரமாகும். இதில் மலரும் பூக்கள் பர்ப்பிள் மற்றும் சிவப்பு நிறம் என இரு நிறங்களை கொண்டிருக்கும். ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகிய இயங்குதளங்களுக்கு மாற்றாக ஒரே இயங்குதளம் வெளியாக இருப்பதால் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள் டெக் வல்லுநர்கள்.
http://www.ns7.tv/ta/tamil-news/technology/25/1/2019/google-will-introduce-new-operating-system-named-fuchsia