கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் உண்மையை யாரும் மறைக்க முடியாது என்றும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் அண்ணா திராவிடர்கழகப் பொதுச் செயலாளரும் சசிகலாவின் சகோதரருமான திவாகரன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டதோடு இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை என்றும் திவாகரன் தெரிவித்தார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யலாம் எனக் கூறிய திவாகரன், எல்லா விஷயத்திற்கும் பதில் அளிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் திவாகரன் தெரிவித்தார்.
அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சசிகலா குடும்பத்தினர் சிலர்தான் தங்கியிருந்ததாகக் கூறிய திவாகரன், அப்போலோ மருத்துவமனைக்கு வந்த அமைச்சர்கள், அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் உணவு உண்டதால்தான் உணவு கட்டணம் அந்த அளவிற்கு வந்தததாகக் விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் தரம் கெட்ட வகையில் விமர்சனம் செய்யக் கூடாது எனவும் திவாகரன் கண்டித்தார்.
source: ns7.tv