புதன், 23 ஜனவரி, 2019

வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் புகார்! January 22, 2019

Image
2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரந்தில் முறைகேடு செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டும், முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் பதிலும் அவ்வப்போது எழுவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், ஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சையது சுஜா என்பவர் கூறிய குற்றச்சாட்டுகள் தான் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சர்ச்சைகளை மீண்டும் கிளப்பி உள்ளது.
2014ம் ஆண்டு தேர்தலில் தொடங்கி, வரிசையாக நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை 'ஹேக்' செய்துதான் பாஜக வெற்றி பெற்றதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பங்கேற்றதன் காரணம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நிகழ்ச்சியே காங்கிரசுக்காக நடத்தப்பட்டதுதான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், அனைத்து கட்சியினரும் கலந்து கொள்வதாக அளித்த தகவலின் பேரிலேயே அந்த கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். 
அதே நேரத்தில், பாஜகவின் மற்றொரு தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பானவை என தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் chip ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது என்றும், எனவே, இது மிகவும் ஆபத்து நிறைந்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே லண்டன் நிகழ்ச்சி தொடர்பாக டெல்லி காவல்துறையில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. தேவையற்ற வதந்திகள் பரப்பபடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

source: NS7.tv