பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யும் வரையில், தீவிர போராட்டம் மேற்கொள்வோம் என மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், 10 சதவிகித இடஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார். சமூக நீதியை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களுக்கான இடங்கள் இன்னும் நிரப்பப் படவில்லை என்றும், உயர்சாதியினரின் மனு தர்ம ஆட்சியை முறியடிக்கும் விதத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் இந்த சட்டம் ஜெயிக்காது என்ற திருமுருகன் காந்தி, மத்திய அரசுத்துறையில் 2 கோடி வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்த மோடி அரசு ஆண்டுக்கு 2 லட்சம் வேலைவாய்ப்புகளை குறைத்து வந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
மேலும் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லையென்றால் கடுமையான தோல்வியை பா.ஜ.க. சந்திக்கும் என்றும் தேசிய அளவில் 10 விழுகாட்டிற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு செய்யும் அரசு, 90 விழுகாட்டிற்கும் அதிகமாக உள்ள பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு அளவில் தான் இடஒதுக்கீடு தந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
source ns7.tv