சனி, 26 ஜனவரி, 2019

நாட்டின் 70வது குடியரசுத் தின விழா : செங்கோட்டையில் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

2019-01-26@ 10:13:13








புதுடெல்லி : நாடு முழுவதும் 70வது குடியரசுத் தின விழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தின விழாவையடுத்து டெல்லி செங்கோட்டையில்  21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடி ஏற்றினார். மாநிலங்களின் தலைநகரில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக குடியரசு தினத்தையொட்டி டெல்லி அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மறைந்த லான்ஸ் நாயக் நசீர் அமகது வாணிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி மற்றும் தாயிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கினார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண நிறத்தில் இந்தியா கேட்டும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. ராம்நாத் கோவிந்த் கொடி ஏற்றியதை தொடர்ந்து ராஜ்பத் முதல் செங்கோட்டை வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டு வருகிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் தேசத் தந்தை மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்க நாட்டில் இனப்பாகுபாடு காரணமாக ரயிலில் அவமதிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டவை தத்ரூபமாக இடம் பெற்றுள்ளது.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார வண்டிகளும் ஊர்வலத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத ரயிலான, டிரெயின் - 18 மற்றும் புல்லட்ரயில்களின் மாதிரிகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன. குடியரசுத் தின விழாவையொட்டி டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி ராஜபாதை, இந்தியா கேட், அணிவகுப்பு நடக்கும் சாலைகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயரமான கட்டடங்கள் மீது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குடியரசுத்தின விழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர்.