பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் பயிற்சி அளிக்கும் திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் இதனை தெரிவித்தார். இந்தியாவில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும், ஊக்கப்படுத்தவும், இஸ்ரோ புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளதாக கூறிய இஸ்ரோ தலைவர் சிவன், ராக்கெட் ஏவுதளத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும், எனவும் தெரிவித்தார்.
8-ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு, இஸ்ரோவில் ஒரு மாதம் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என்றும், அவர்கள் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் PSLV ராக்கெட் மூலம், இலவசமாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும், என்றும் சிவன் கூறினார்.
மேலும், இஸ்ரோ சார்பில் திருச்சி, இந்தூர், நாக்பூர், ரூர்கேலா மற்றும் திரிபுராவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் குறித்து, நடப்பாண்டில் கூடுதல் கவனம் செலுத்தப்படும், என்றும் அவர் தெரிவித்தார்.
source : ns7.tv