செவ்வாய், 22 ஜனவரி, 2019

நாட்டிலேயே சிறந்த காவல் நிலையத்தில் நடந்த கொடூரம்: நீதி கேட்டு காலில் விழுந்து கதறிய மூதாட்டி விரட்டியடிப்பு








source: www.dinakaran.com/News_Detail.asp?Nid=467767
லக்னோ: தொழிற்சாலையில் பேரன் இறந்ததற்காக நீதி கேட்டு இன்ஸ்பெக்டர் காலில் மூதாட்டி ஒருவர் விழுந்து கெஞ்சியும் அவர் மசியவில்லை. இந்த கொடூர சம்பவம் உபி மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த காட்சிகள் வாட்ஸ்அப்பில் வைரலானதால் அந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ஒரு காலத்தில் இந்திய போலீஸ் செயல்பாடுகள் வெளிநாட்டினர் பாராட்டும் அளவிற்கு இருந்தது. ஆனால் இன்று எல்லாமே தலைகீழாகி விட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டியவர்களே தடம் மாறிவிட்டனர். உபி மாநிலத்தில் மூதாட்டி ஒருவர் தனது பேரன் இறந்ததற்கு நீதி கேட்டு போலீஸ் கதவை தட்டினார். ஆனால் அவருக்கு நேர்ந்த கதி கண்ணீரை வரவழைத்துள்ளது.

உபி மாநிலம் லக்னோ பகுதி குடம்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் யாதவ்(20). இவர் அங்குள்ள பிளைவுட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 18ம்தேதி பணியில் இருந்தபோது இயந்திரத்தில் அடிபட்டு இறந்தார். அவருக்கு தாய் தந்தை இல்லை. பாட்டி பிரம்மாதேவி(75) பராமரிப்பில்தான் வசித்து வந்தார். பேரன் இறந்த துக்கம் ஒருபுறமிருந்தாலும், பேரன் சாவிற்கு காரணமாக இருந்த தொழிற்சாலை உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என  மூதாட்டி பிரம்மாதேவி, குடம்பா போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தேஜ்பிரகாஷ் சிங் என்பவரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. அய்யா என்பேரன் சாவிற்கு நீதி வேண்டும்... நீங்கள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மூதாட்டி கதறி அழுதார்.

 கைகளை பிடித்து கெஞ்சினார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ எதுவும் பேசாமல் அலட்சியமாக கால்மேல் கால்போட்டு சாய்ந்தபடி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அந்த மூதாட்டி, `அய்யா எனக்கு நியாயம் கிடைக்க கருணை காட்டுங்கள்’ என்றவாறு இன்ஸ்பெக்டர் காலில் தடால் என்று விழுந்தார். இதனால் கோபமடைந்த அவர் மூதாட்டியை அடித்து விரட்டாத குறையாக அங்கிருந்து வெளியேற்றினார். அப்போது மூதாட்டியின் உறவினர்கள் சிலர் இன்ஸ்பெக்டர் நடந்து கொண்ட விதத்தை அப்படியே சொல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட்டனர். அது வைரலாகி உபி காவல்துறையை உலுக்கி எடுத்து விட்டது. இதைத்தொடர்ந்து அந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நாட்டிலே சிறந்த 3 போலீஸ் நிலையத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்தது. அதில் லக்னோவில் உள்ள இந்த குடம்பா போலீஸ் நிலையமும் ஒன்று. முறையாக ஆவணங்களை பராமரித்து, புகார் தர வருகிறவர்களை மரியாதையாக நடத்துகிறார்கள் என்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. தற்போது இன்ஸ்பெக்டர் மூதாட்டியிடம் நடந்து கொண்ட விதத்தால், இப்படிபட்ட போலீஸ் நிலையத்திற்கா மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விருது வழங்கினார்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.