source ns7.tv
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா ஈடுபட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழையமுடியாது என்று கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார். கர்நாடக எல்லையான அத்திபள்ளியில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், மேகதாது விவகாரத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். தமிழர்கள் கன்னியமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கர்நாடக அரசு அணைகட்டும் பணியை தொடங்கவில்லை என்றால், வரும் 27ம் தேதி தாங்களே அடிக்கல் நாட்டுவோம் என்று எச்சரித்தார்.