திருவாரூர் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாள்தோறும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் திருக்கரவாசலில் நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் ஜனவரி 27 முதல் காத்திருப்பு போராட்டம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடும் வரை நடைபெறும் என போராட்ட குழு அறிவித்து அன்று முதல் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் நாள் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியிடம் தங்கள் பகுதியை விட்டு விடுமாறு கை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் இன்று அதிகாலையில் 12 விவசாயிகளை கைது செய்து கூடூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட விவசாயிகளை அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து செய்தியாளா்களிடம் பேசியபோது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விளை நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும் எனவே தான் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
மேலும் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளது விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என தெரிவித்தார்.