சனி, 26 ஜனவரி, 2019

முடிவுக்கு வந்தது அமெரிக்க நிர்வாக முடக்கம்...: 15ம் தேதி காலக்கெடு நிர்ணயித்து அதிபர் டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த நிர்வாக முடக்கம் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதலுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்கி அரசு நிர்வாகம் மீண்டும் செயல்பட அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் பிப்ரவரி 15ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து இந்த ஒப்புதலை அதிபர் அளித்துள்ளார். காலக்கெடுவுக்குள் எல்லை சுவர் எழுப்ப நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறாவிட்டால் மீண்டும் நிர்வாக முடக்கம் அல்லது அவசர நிலை பிரகடணம் செய்யப்படும் என்பதில் முடிவுடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேறிகளை தடுக்க மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் முறையிட்டார்.

ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டிரம்ப் கேட்ட தொகையை அளிக்க மறுத்துவிட்டனர். எனேவ மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கும் மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து அரசின் செலவீன மசோதாக்களை நிறைவேற்ற டிரம்ப் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் அரசு நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய அரசு துறைகள் முடங்கின. இதனால் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி தவித்து வருகிறார்கள். அரசு சேவைகளைப் பெற முடியாமல் குடிமக்களும் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், நாங்கள் நல்ல உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம். அதனால், அரசு முடக்கத்தைத் திரும்பப் பெறுகிறேன். அரசாங்க ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியப் பணம் விரைவில் வந்துசேரும் என கூறியுள்ளார். 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468684