source ns7.tv
உலகில் உள்ள பல கோடி மக்களில் பெரும்பாலானோர் கொசுக்களால் ஏற்படும் மலேரியா, டெங்கு, சிகா போன்ற நோய்தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக கொசுக்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கான வழியை கண்டுபிடித்துள்ளனர் அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
கொசுக்கள் முட்டையிடுவதற்கு காரணமாக இருக்கும் Eggshell Organizing Factor - 1-ன் செயல்பாடை கட்டுப்படுத்தி, கொசுக்கள் இடும் முட்டையை கொசுவாக மாறமுடியாமல் செய்துவிடமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஆராய்ச்சி அறிக்கையை சமர்பித்துள்ள அவர்கள், கொசுக்களின் முட்டையின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் இந்த முறையின் மூலம் கொசுக்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரே சமயத்தில் கொசுக்கள் அதிக முட்டையிடுவதால் மட்டுமே கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது எனவும், இந்த முறையை பயன்படுத்தினால் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.. சில கொசுக்களை வைத்து பரிசோதித்து பார்த்ததில், அந்த கொசுக்கள் இடும் முட்டை லார்வாக்களாக (larva) மாறுவதற்கான வாய்ப்பை குறைத்தது எனவும் இந்த முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் கொசுக்களின் உற்பத்தியை குறைக்கமுடியும் என்றும் கொசுக்களால் ஏற்படும் தொல்லைகளை தடுக்கமுடியும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.