பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுவந்துள்ள புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செமஸ்டர் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய செமஸ்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாணவர்கள், புதிய தேர்வு முறையால் தாங்கள் பட்டம் பெறுவது பாதிக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய தேர்வு முறையால், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவித்தார். மேலும், இதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். எனினும், மாணவர்களின் கோரிக்கை குறித்து, பல்கலைக்கழக உயர்மட்டக் குழு கூடி ஆலோசிக்கும் என்றும், மணவர்களின் கோரிக்கை தொடர்பாக, 10 நாளில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், பதிவாளர் குமார் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ள, புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய அறிவிப்பால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிததாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையை மாற்ற வலியுறுத்தி, நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல் பருவத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், ஓராண்டு கழித்தே தேர்வு எழுத முடியும் என்ற விதிமுறையை மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
source ns7.tv