திங்கள், 28 ஜனவரி, 2019

ஜாக்டோ-ஜியோ அமைப்பு வலியுறுத்தும் 9 அம்ச கோரிக்கைகள் இதுதான்! January 28, 2019

source :http://ns7.tv/ta/tamil-news/tamilnadu-newsslider/28/1/2019/jacto-geo-9-feature-requests


Image
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். 21.01-2019ம் தேதியிட்ட கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அந்த அமைப்பினர் வழங்கினர். அந்த மனுவில் குறிப்பிடப்படிருந்த 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தான், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் முன்வைக்கும் 9 அம்ச கோரிக்கைகள் இதுதான்,

9 அம்ச கோரிக்கைகள்:

1)01-004-2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
2) இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.
3)முதுநிலை ஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலக, களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும், உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.
4)சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பலநோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
5)21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிட வேண்டும்.
6) 2003, 2004 மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைபடுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
7)அரசாணை எண் 56ல் இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பறிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வுக் குழுவினை இரத்து செய்ய வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண்கள் 100 மற்றும் 101 ஆகியவற்றை இரத்து செய்ய வேண்டும். 5000 அரசுப்பள்ளிகள் மூடுவதை உடனடியாகக் கைவிட்டு, சமூக நீதியினைப் பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8) 3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும்.
9) அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தான் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் போராடி வருகின்றனர். அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்றே கடைசி நாள் என்று அரசு கெடு விதித்துள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முடிவு என்ன என்பது இன்று தெரியவரும்.