ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 72 ஆசிரியர்கள் சிறையில் அடைப்பு! January 26, 2019

Image
நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 72 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
நாமக்கலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 72 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.  இதையடுத்து சாலை மறியலை முன் நின்று நடத்திய அந்த 72 ஆசிரியர்கள், தங்களை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  9 மணி நேரமாக அவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 1ந்தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
விருதுநகரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வீடு திரும்ப மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது  செய்யப்பட்டு மண்டபத்தில் காவல் வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஒரு சில நிர்வாகிகளை மட்டும் காவல்துறையினர் விடுவிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மற்றவர்களும் வெளியே செல்ல மறுத்ததால் காவல் துறையினர் மின் இணைப்புத் துண்டித்தனர். இதனால் பெண் நிர்வாகிகள் கடும் அவதியடைந்தனர்
சங்கரன் கோவிலில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் சிறை வைக்கப்பட்டிருந்த மண்டபத்துக்கு வெளியே திமுக மற்றும் சி.பி.எம். கட்சியினர் கூடினர். அப்போது சி.பி.எம். வட்டார செயலாளர் அசோக் ராஜுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதைத் தொடர்ந்து காவல்துறையால் அவர் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார் 
source: http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/26/1/2019/jacto-geo-protest-72-teachers-arrested-namakkal