இந்தியாவில் உள்ள 50 சதவிகித மக்களின் சொத்துக்கு இணையாக 9 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
2018-ம் ஆண்டு உலகளாவிய பொருளாதர வளர்ச்சி குறித்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஹாக்ஸ்ஃப்பான் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் 10 % மக்கள் நாட்டின் 73 % சொத்துக்களை வைத்துள்ளதாகவும். அவர்களில் 1 சதவிகித்தினர் மட்டும் 51.53 சதவிகித சொத்துக்களை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார படிநிலையில் கீழ்நிலையில் உள்ள 70 கோடி பெரும்பான்மை மக்கள் நாட்டின் சொத்தில் வெறும் 4.8 % மட்டுமே வைத்துள்ளனர்.
1 சதவிகித பணக்காரர்களின் சொத்து கடந்த ஆண்டு மட்டும் 39 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது பெரும் பணக்காரர்களின் சொத்து நாள் ஒன்றுக்கு 2,200 கோடி வீதம் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், மீதம் உள்ள அடித்தட்டு மக்களின் சொத்து வெறும் 3 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள பெரும் வித்தியாசத்திற்கு பொருளாதாரத்தில் வருவாய் சமநிலை இல்லாததே காரணம் என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிறந்த கல்வி மற்றும் மருத்துவம் உயர் வகுப்பினருக்கு மட்டுமே இனி கிடைக்கும் சூழல் உருவாகி வருகிறது. இந்தியாவில் உள்ள ஒரு சதவிகித பணக்காரர்கள் தங்கள் செலுத்தும் வரியில் 0.5 % உயர்த்தி செலுத்தினால் சுகாதரத்திற்காக தற்போது மத்திய அரசு செலவிடும் தொகையில் 50 % தொகையை இன்னும் கூடுதலாக செலவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
source ns7.tv