புதன், 23 ஜனவரி, 2019

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு இடையிலான மோதலின் பின்னணி இது தான்! January 22, 2019

Image
கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அரசியல் களத்தையும் பரபரப்பாக்கியிருக்கும் செய்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டதும், அவர்களில் ஒரு சிலருக்கு இடையிலான அடிதடி மோதலும் தான். அதில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விவகாரத்தில் என்ன தான் நடந்தது என்பதை தெரிந்துகொள்வோம்.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் காரணமாக அதிருப்தியில் இருந்து வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயல்வதாகவும் இதில் இருந்து தப்ப 76 எம்.எல்.ஏக்களை பெங்களூரு அருகிலுள்ள ஈகிள்டன் எனும் தனியார் சொகுசு விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்று தங்கவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவில் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த்சிங் என்ற எம்.எல்.ஏ ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.
இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும்,  அமைச்சருமான சிவக்குமார், சமீர் அகமது ஆகியோர் முற்றிலும் மறுத்ததுடன் மாறுபட்ட விளக்கங்களையும் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். 
இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் அரங்கேறியது. சண்டையே நடக்கவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் கூறிய நிலையில், தாக்குதலுக்கு உள்ளான எம்.எல்.ஏ ஆனந்த் சிங் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சக எம்.எல்.ஏ-வான காங்கிரஸ் கட்சியின் காம்பிளி தொகுதி எம்.எல்.ஏ கனேஷ் என்பவர் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு கடுமையாக தாக்கியதாகக் கூறி அதிர வைத்தார்.
சனிக்கிழமையன்று தாங்கள் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு செல்லும் போது தனக்கும், கனேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும். எதிர்வரும் தேர்தலில் தனக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் இல்லையெனில் தனது தங்கை மகனை கொலை செய்து விடுவதாக கனேஷ் மிரட்டியதாகவும் ஆனந்த் சிங் தெரிவித்தார்.
மேலும் இதற்கு தான் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கனேஷ், தன்னை சரமாறியாக அடித்து, கீழே தள்ளிவிட்டதாகவும், இதனால் தனது தலை, கண் மற்றும் மூக்கு பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார். கடுமையான தாக்குதலால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் அப்போது அருகில் இருந்தவர்கள் தடுத்ததாகவும், அப்போதும் அருகில் இருந்த காவலாளி ஒருவரிடம் தன்னை கொலை செய்ய துப்பாக்கியை கனேஷ் கேட்டதாகவும், மயக்கம் தெளிந்த போது தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததாகவும் ஆனந்த் சிங் தெரிவித்தார்.
ஆனந்த் சிங்கின் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட கனேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். 
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ கனேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இடையிலான இந்த அடிதடி மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

source: ns7.tv