சனி, 12 ஜனவரி, 2019

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி! January 12, 2019


Image
நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகளில் முக்கிய திருப்பமாக உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதிகட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.
பரம எதிரிகளாக உத்தரபிரதேச அரசியலில் செயல்பட்டு வந்த அந்த இரு கட்சிகளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் கைகோர்த்துள்ளதை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் இன்று கூட்டாக அறிவித்தனர். உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் தலா 38 இடங்களை இரு கட்சிகளும் பகிர்ந்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் கூட்டணி இந்திய அரசியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவாதி தெரிவித்தார்.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களிடையே பகையை மூட்ட எந்த எல்லைக்கும் பாஜக செல்லும் எனத் தெரிவித்த அகிலேஷ் யாதவ் இரு கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து அந்த தந்திரங்களை முறியடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மாயாவதி பிரதமராக நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா என்று கேட்டபோது உத்தரபிரதேசம் நாட்டிற்கு பிரதமர்களை தந்த நிகழ்வுகள் ஏற்கனவே நிகழ்ந்திருக்கிறது என்று கூறிய அகிலேஷ், அதே போன்ற சூழல் மீண்டும் ஏற்படும் என்றும் தெரிவித்தார். 

source: ns7.tv