வெள்ளி, 1 மார்ச், 2019

வீரத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த அபிநந்தன்! March 01, 2019

source ns7.tv
Image
பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானி அபிநந்தன், இன்று நாடு திரும்பும் நிலையில், அவர் வீரத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்துள்ளார்.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி நுழைந்த போது, அதனை விரட்டியடிக்க இந்தியா அனுப்பிய விமானிகளில், அபிநந்தனும் முக்கியமான நபர். விங் கமாண்டரான இவர் தான் கிட்டத்தட்ட இந்திய விமானங்களை வழிநடத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்திய தரப்பு சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் F-16 ரக விமானத்தையும், அபிநந்தன் தான் வீழ்த்தினார் என்று கூறப்படுகிறது. தப்பிச் சென்ற பாகிஸ்தான் விமானங்களை விரட்டிக் கொண்டு சென்ற அபிநந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டார். இதில் அவர் பயணித்த MIG-21 ரக போர் விமானம் சேதமடைந்ததால், அதில் இருந்து பாராசூட் உதவியுடன் அபிநந்தன் தப்பித்தார். 
எனினும், இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் விழுந்த அவரை அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடிக்கப்பார்த்தனர். ஆனால், தன்னிடம் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தி அவர்களை எச்சரித்த அபிநந்தன், தன் வசம் இருந்த முக்கிய ஆவணங்களை, அழித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த கிராமத்து இளைஞர்களால் அவர் தாக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் கண்டனக் குரல்களை எழுப்பிய நிலையில், அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் மீட்கப்பட்டார். 
பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், அவர் யாருக்கும் அச்சப்படாமல் கேள்விகளுக்கு பதிலளித்த வீடியோ காட்சிகள், அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி, ஒட்டு மொத்த தேசத்தையும் பெருமிதம் கொள்ள வைத்தது. 2004ம் ஆண்டு பணியில் சேர்ந்த அபிநந்தன், தற்போது விங் கமாண்டர் பதவியில் இருக்கிறார். இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு இணையானது இந்த விங் கமாண்டர் பதவி எனக் கூறப்படுகிறது. 
15 ஆண்டுகளுக்கும் மேலாக விமானப் படையில் இருக்கும் அபிநந்தனின் தந்தையான சிம்மக்குட்டி வர்தமான், 1974ல் இருந்து 2012ம் ஆண்டு வரை விமானப்படையில் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்மக்குட்டியின் தந்தையும், இந்திய விமானிகளுக்கு பயிற்சி அளித்தவர் என கூறப்படுகிறது. 3 தலைமுறைகளாக இந்திய விமான படையில் சேவையாற்றும் இந்தக் குடும்பத்தினர், விமானி அபிநந்தனால், மேலும் பெருமை அடைந்துள்ளனர்.