இந்தியாவை ஆளும் கட்சியின் அரசியல் ஆதாயத்திற்காகவே போர் பதற்றம் உருவாக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் (PTI) குற்றம்சாட்டியுள்ளது.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிர்தியாகம் செய்தது தொடர்பாக கர்நாடக பாஜக தலைவரான எடியூரப்பா பேசிய கருத்தானது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது. பாஜகவின் பக்கம் காற்று வீசுகிறது. பாகிஸ்தான் எல்லைக்குளேயே தீரத்துடன் சென்று தீவிரவாதிகள் பதுங்கு குழிகளை அழித்த சம்பவம் நாட்டில் மோடி ஆதரவு அலையை உருவாக்கி இருக்கிறது. இதன் தாக்கத்தை வரும் மக்களவைத் தேர்தலில் காணலாம். மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும்” என எடியூரப்பா பேசி இருந்தார்.
இது தொடர்பாக NDTV செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப், எடியூரப்பாவின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
அணு ஆயுதங்களைக் கொண்ட இருநாடுகளை போர் பதற்றத்திற்கு உள்ளாக்குவதிலுள்ள பின்னுள்ள அரசியல் விளையாட்டு வெளிப்பட இரு தினங்களாகி இருக்கிறது. 22 சீட்டுகளுக்காகதான் என்பதை தவிர வேறு காரணம் இதற்கு பின்னால் இல்லை. #SayNoToWar என இம்ரான் கானின் கட்சி பதிவிட்டுள்ளது.
மற்றொரு பதிவில், இத்தகைய பதற்றங்கள் எல்லாம் ஆளுங்கட்சி 22 சீட்டுகளில் வெற்றிபெற தானா, தேர்தலுக்கான வாய்ப்பா போர்? என கேள்வி எழுப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், “அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிரித்தாளுவோரை அடையாளம் கண்டு ஒதுக்கிவையுங்கள். நாட்டுக்கும், வீரர்களுக்கும், மக்களுக்கும் போர் சேதம் விளைவிக்கக்கூடியது. ஒரு மனிதரின் அரசியல் ஆதாயத்திற்காக போரை அனுமதிக்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் அரசியல் ஆதாயத்திற்காகவே போர் பதற்றம் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் பிரதமரின் கட்சி நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: http://www.ns7.tv/ta/tamil-news/world-editors-pick/28/2/2019/imran-khans-party-uses-bs-yeddyurappas-comment