credit ns7.tv
விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ஊழியர்கள் உட்பட விமான நிலையத்தில் பணியாற்றும் அனைத்து தரப்பினருக்கும் இனி பயோமெட்ரிக் நுழைவுச் சீட்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது தற்போது வழங்கப்படும் பேப்பரிலான நுழைவுச்சீட்டுக்கு (Airport Entry Permit) மாற்றாக அமையும்.
விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பயோமெட்ரிக் தரவுகளுடன் இயங்கும் வகையிலான மையப்படுத்தப்பட்ட அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு (CACS) திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்துள்ளார்.
இதன் மூலம் விமான நிலைய ஆணையத்தின் கீழ் இயங்கும் 43 விமான நிலையங்கள் மற்றும் கூட்டு முறையில் இயக்கப்படும் 5 விமான நிலையங்களில் இனி விமான நிலையத்தில் பணிபுரியும் நிலைய ஊழியர்கள் மற்றும் பிற சேவைகளுக்காக நிலையத்தை பயன்படுத்தும் ஊழியர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும்.
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நுழைபவர்கள் குறித்து இலகுவாக கண்டறியப்படும். இது பாதுகாப்பை அதிகரிக்கும் திட்டம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இதற்காக சிப் பொருத்தப்பட்ட நுழைவு சீட்டு ஒன்று ஊழியர்களுக்கு வழங்கப்படும் இதன் மதிப்பு ரூ.225 ஆகும்.
விமான நிலையங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் ஊழியர்களுக்கு இந்த பயோமெட்ரிக் கார்டு வழங்கப்படுமெனவும், ஊழியர்களின் நுழைவு இனி காலதாமதமில்லாமல் நடைபெறுவதுடன் நுழைவுக்கான கால வரம்பு ஒரு ஆண்டில் இருந்து 3 ஆண்டாக உயர்த்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.