credit ns7.tv
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் பல்வேறு கட்சியினர் சார்பில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற கண்டன பேரணி நடைபெற்றது. மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து துவங்கிய பேரணி விஎஸ்டி பள்ளிவாசல் வழியாக பஜார் திடலில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் பிரம்மாண்டமான தேசிய கொடியை கையில் ஏந்தியபடி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அரசியல் கட்சியினர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியைத் தொடர்ந்து பஜார் திடலில் கண்டன ஆர்பாட்டமும் நடைபெற்றது.
கோவையில், SDPI சார்பில் நடைபெற்ற கண்டன பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து அம்பேத்கர் திடல் வரை பேரணி நடைபெற்றது. பின்னர், பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணியின் போது, நீண்ட தேசிய கொடியை ஏந்தி வந்தவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டினை கைவிட கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.