credit ns7.tv
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்குள்ள தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் திரளானோர் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மற்றொரு இடத்தில் நடைபெற்ற போராட்டத்தில், பாலிவுட் நட்சத்திரங்கள் அனுராக் காஷ்யப், டாப்ஸி, ஜோயா அக்தர், தியா மிர்சா உட்பட பலர் பங்கேற்று டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
டெல்லி இந்தியா கேட் அருகே நடைபெற்ற கண்டன பேரணியில் தீப்பந்தத்தை ஏந்திச்சென்று இளைஞர் காங்கிரசார் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பதவி விலகுமாறும் முழக்கமிட்டனர்.