ஞாயிறு, 1 மார்ச், 2020

பத்திரப் பதிவு, பட்டா மாறுதல்: ஆன்லைனில் மிகச் சுலபம்

பத்திரப் பதிவு, பட்டா மாறுதலுக்காக யாரிடமும் பணத்தை கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம். வீட்டில் இருந்தபடியே சுலபமாக பட்டாவை மாற்றம் செய்ய முடியும். இது தொடர்பான தகவல்களை இங்கு காணலாம்.
காணி நிலம் வாங்குவது, பலருக்கு வாழ்வின் லட்சியம். அதில் பத்திரப் பதிவு, பட்டா மாறுதல் எழும் இடையூறுகளை சமாளிப்பது பெரும் சவால்! புதிதாக வாங்கும் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வது ஆன்லைனில் இன்று சுலபமாகியிருக்கிறது. இதற்கு முன்பு வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மற்றொருவருக்கு விற்பனை செய்து பத்திரம் பதிவு செய்யவோ, அந்த சொத்தின் பட்டாவில் இருக்கும் பெயரை மாற்றவோ வி.ஏ.ஓ. அல்லது தாலுகா அலுவலகம் செல்லவேண்டும். அங்குதான் ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை இருந்தது. இதனால் பணம் மற்றும் நேரம் வீணானது.

பொதுமக்களின் இந்த சிரமத்தை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் வசதியை அரசு கொண்டு வந்தது. எனினும் ஆவணங்களை தாலுகா அலுவலங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது பத்திரப்பதிவு செய்யும்போது தானாக பட்டா மாறுதல் செய்யும் வசதி அறிமுகமாகியிருக்கிறது.
இந்த முறைப்படி, முந்தைய பட்டாவில் சொத்தை விற்பவரின் பெயர் சரியாக உள்ளதா? கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தின் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவை சரியாக உள்ளனவா? என்பதை சரிபார்த்து பதிவேற்றம் செய்ய முடியும். குறிப்பிட்ட பட்டாவை புதிதாக கிரையம் முடிப்பவரின் பெயருக்கு சரியாக மாற்றம் செய்ய முடியும்.
பட்டா மாறுதல் செய்யப்பட்டதும், சொத்தை வாங்கியவர் மற்றும் விற்றவரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். கிரையம் முடித்தவர்கள் //eservices.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
credit indianexpress.com

Related Posts: