சென்னை மாதவரத்தில் ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15 மணி நேரத்தையும் கடந்த கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததை போன்று தீ பிளம்புகளை கக்கி கரும் புகை மண்டலத்தால் சூழ்ந்த பகுதியானது மாதவரம். புறநகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான குடோனில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் எதிர்பாராத விதமாக திடீரென தீப் பிடித்தது. பிளாஸ்டிக் மற்றும் ரசாயன பொருட்கள் உள்ள குடோன் என்பதால் ஒரு இடத்தில் பற்றிய தீ மளமளவென பரவியதோடு, பயங்கர சத்தத்துடன் ரசாயன பேரல்களும் வெடித்து சிதறின. இதனால்அந்த பகுதியே கரும்புகையுடன் தீ பிளம்புகளாக காட்சியளித்தன.
கிடங்கின் அருகில் இருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் தீ பரவியது. லாரி கிடங்கிற்கு தீ பரவியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 12 லாரிகள் தீயில் எரிந்தன. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு வர வேண்டாம் என பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தினர். கரும்புகையால் பொதுமக்கள் சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. தகவலறிந்து மாதவரம், செங்குன்றம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன. மேலும் ஏராளமான டேங்கர் லாரிகளில் தண்ணீர் வரவழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் சென்று, தீயை அணைக்கும் பணிகளை துரிதப்படுத்தினர். பின்னர் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, நவீன தொழில்நுட்ப ஸ்கை லிப்ட் தீயணைப்பு கருவி சென்னை விமான நிலையத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் சுமார் 100 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிட்ட சைலேந்திர பாபு, விபத்து எப்படி நடந்தது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
credit ns7.tv