சமூக இடைவெளி தங்களுக்கு கிடைத்த சாபம் என பார்வை மாற்றுத்திறனாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சாதாரண நாட்களில் நாம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பார்வை மாற்றுத்திறனாளிகள் நின்று கொண்டிருப்பதை பார்த்தால் அவர்களது கைகளை பிடித்து சாலையை கடக்க உதவி செய்வோம். ஆனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலகல் ஒன்றுதான் தற்போதைக்கு ஒரே தீர்வாக முன்வைக்கப்படுகிறது. மேலும் சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட அறிவுரைகளை ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகும் மக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அதனால் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பார்வை மாற்றுத்திறனாளிகள் வெளியே வரும் போது கொரோனா அச்சத்தால் அவர்களுக்கு உதவி செய்ய யாராவது வருவார்களா என்ற கவலையும் அவர்களது மனதில் எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர்கள் வெளியே செல்லும் போது அவர்களை சுற்றி இருக்கும் பொருட்களை தொட்டுப் பார்த்துதான் அறிந்து கொள்வார்கள். தற்போது கொரோனா பரவும் அச்சத்தால் அப்படி செய்வதும் சிரமம்தான். சமூக விலகலை அவர்கள் ஒரு சாபமாகவே பார்க்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
மும்பையை சேர்ந்த 31 வயதான ராகுல் கம்பீர் என்ற பார்வை மாற்றுத் திறனாளி, ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு தான் வேலைக்கு செல்வதை நினைத்து கவலையுடன் உள்ளார். இதுகுறித்து வருத்தத்தை பகிர்ந்துள்ள அவர், ‘என்னுடைய மனதில் நிறைய கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது. நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற பார்வையற்ற பலரும் இதை அனுபவித்து வருவார்கள் என நான் நினைக்கிறேன். ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு நாங்கள் எப்படி பாதுகாப்பாக வேலைக்கு சென்று வரப் போகிறோம் என தெரியவில்லை. வீட்டில் இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. ஏனென்றால் இங்கு எங்களை சுற்றி என்ன இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் வெளியில் அப்படி இல்லை’ என கூறியுள்ளார்.
குறிப்பாக பார்வை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு அவர்களுடைய தேர்வு குறித்து கவலை எழுந்துள்ளது. பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதும் போது அவர்கள் சொல்வதை கேட்டு எழுதுவதற்கு ஒருவர் நியமிக்கப்படுவார். சமூக விலகல் என்ற விதிமுறையால் தேர்வு எழுதுவதிலும் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சிரமங்கள் தொடர்பாக அனைவரும் பேசி வரும் நிலையில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக சிந்திக்க மறந்துவிட்டோம். சமூக விலகல், தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என மக்கள் நம்பிக்கையில் இருக்கும் நிலையில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அதுவே ஒரு கவலையாகயும், சாபமாகவும் மாறியுள்ளது என்பதை தற்போது புரிந்துகொள்ள முடிகிறது.
credit ns7.tv