கொரோனா வைரஸ் தொற்றுடன் மிகவும் லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல் முறைகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் அரசாணையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மிகவும் லேசான அறிகுறிகளுடன் இருப்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் எவ்வித தொடர்பும் இன்றி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான அறை இருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. 24 மணி நேரமும் கவனித்து கொள்ளும் நபரும், மருத்துவமனைக்கும் இடையே தொடர்பை இணைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை கவனிக்கும் நபர் மற்றும் நெருங்கிய தொடர்பில் உள்ளோரும், மருத்துவரின் பரிந்துரையின்படி ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை உட்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவருடன் தொடர்பில் இருப்போர், ஜிங் மாத்திரைகள் 20 மில்லிகிராம், வைட்டமின் சி 100 மில்லி கிராம் ஆகியவற்றை 10 நாட்களுக்கும், நிலவேம்பு அல்லது கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றை 10 நாட்களுக்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.