புதன், 6 மே, 2020

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ’ஹெர்ட் இம்யூனிட்டி’ கைகொடுக்குமா?

உயிர்க்கொல்லி கொரோனா
உயிர்க்கொல்லி நோயான கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் மருந்து கண்டுபிடிக்கும் வரை கொரோனாவை எதிர்த்து போராடுவது மிகவும் சவாலான ஒன்று தான். 

ஹெர்ட் இம்யூனிட்டி தீர்வா?
இந்த நிலையில், கொரோனா வேகமாக பரவுவதை போல் ’ஹெர்ட் இம்யூனிட்டி’ என்ற வார்த்தையும் தற்போது மின்னல் வேகத்தில் பரவுகிறது. கொரோனா பரவலை தடுக்க ஹெர்ட் இம்யூனிட்டி உதவுமா என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. 

அது என்ன ஹெர்ட் இம்யூனிட்டி? அது எப்படி வேலை செய்கிறது? இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா? இதனால் ஏற்படும் பாதகங்கள் என்னென்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இதனை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

அது என்ன ஹெர்ட் இம்யூனிட்டி?
ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட கொள்ளை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருந்தால் அந்த நோய் அதிக அளவில் பரவுவது தடுக்கப்படும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு நோய்த் தொற்று பரவுவதை தடுக்க முடியும். 

இதனை அடிப்படையாக வைத்து தான் ஹெர்ட் இம்யூனிட்டி என்ற மந்தை எதிர்ப்பு சக்தி செயல்படுகிறது. அது எப்படி என்றால், பெரும்பாலான மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவோ, செயற்கையாகவோ அதிகரிப்பதன் மூலம் நோய் பரவலை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

2 வழிமுறைகள்
ஒரு வைரஸுக்கு எதிராக ஹெர்ட் இம்யூனிட்டியை உருவாக்குவது எப்படி? இதில் இரண்டு வழிகள் உள்ளன. அதில் முதலாவது, அந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடித்து அதனை மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு செலுத்தி செயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை பெற செய்வது. மற்றொன்று, அந்த வைரஸை சமூகத்தில் பரவவிட்டு பெரும்பான்மையான மக்களுக்கு வைரஸ் தொற்றை வரவழைத்து, இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வது. 

ஆனால் கொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததால், முதலாவது முறை சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியென்றால் இரண்டாவது முறை சாத்தியமா என்றால் கொரோனா விஷயத்தில் அதுவும் சிக்கல் தான் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். சில வைரஸ் நோய்க்கு மொத்த மக்கள் தொகையில் 40% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் அந்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் கொரோனா விஷயத்தில் இது சரிவராது என கூறுகின்றனர். 

கொரோனாவின் வலிமை
சில வைரஸ் தொற்றுக்கு 80% லிருந்து 95% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தான் பரவலை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை பொறுத்தவரை ஹெர்ட் இம்யூனிட்டியில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா? கொரோனா வைரஸ் பாதிப்பு உலகிற்கு புதியது. அதனால் இதுதொடர்பாக உலக நாடுகளுக்கு போதிய அனுபவம் இல்லை. இந்த வைரஸின் நிலை மற்றும் பரவல் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் இல்லை. 

ஆனால் மற்ற நாடுகளில் இதுபோன்ற சம்பவம் அதிகமாக நிகழவில்லை. இதனால் இந்த வைரஸ் தொடர்பாக கணிப்பது கடும் சிரமமாக இருக்கிறது. அதனால் இந்த நோயை மக்கள் மத்தியில் பரவ விடுவதால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்படவும், உயிரிழக்கவும் வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. நோய்த் தொற்று பெற்றவர் அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெறுவாரா என்பதும் கேள்விக்குறியான ஒன்று தான். 

இதுபோன்ற சில பிரச்னைகளும் ஹெர்ட் இம்யூனிட்டி முறையை கொண்டு வருவதில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு முன்னர் ஸ்வைன் ஃப்ளூ உள்ளிட்ட வைரஸ்களை கட்டுப்படுத்தவும் ஹெர்ட் இம்யூனிட்டி முறை செயல்படுத்தப்பட்டது. 

வெற்றி தருமா?
ஆனால் அனைத்து விதமான வைரஸுக்கு எதிராகவும் இது வெற்றிகரமான முடிவை தருமா என சொல்வது கடினம் தான். தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு ஹெர்ட் இம்யூனிட்டி சாத்தியமா?வருங்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்து கண்டுபிடித்தால், அதனை மக்களுக்கு செலுத்தி எதிர்ப்பு சக்தியை பெற வைக்க முடியும். அதிலும் குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், கர்ப்பிணிகள் தவிர மற்றவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தலாம். இதன் மூலம் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவுவதை தடுக்க வழி உள்ளது. 

சமூக விலகலே ஒரே வழி
கொரோனாவின் தாக்கம் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், உரிய நடவடிக்கைகள் இல்லாமல் ஹெர்ட் இம்யூனிட்டியை உருவாக்க முயல்வது தவறான முடிவாக தான் இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை சமூக விலகலை கடைபிடிப்பது ஒன்று தான் தற்போதைக்கு ஒரே வழி என கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஹெர்ட் இம்யூனிட்டி கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வீடியோ வடிவில்

credit : https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-technology-important-editors-pick-newsslider/5/5/2020/herd-immunity-our-best