சனி, 9 மே, 2020

பரிசோதனை அதிகம் செய்வதாலேயே பாதிப்பு அதிகமாக தெரிகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பரிசோதனை அதிகம் செய்வதாலேயே பாதிப்பு அதிகமாக தெரிகிறது என, இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், “தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 399 பேர். தமிழகத்தில் மொத்தம் 6,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36 அரசு ஆய்வகங்களும், 16 தனியார் ஆய்வகங்கள் என 52 ஆய்வகங்கள் மூலமாக இன்று மட்டும் 13,980 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் இதுவரை 2,16,416 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. சோதனைகள் அதிகரிப்பதால் தான் பாதிப்பு அதிகமாகிறது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
நம்மை விட அதிகமான மக்கள்தொகை மற்றும் அதிக பாதிப்புகளை கொண்ட மஹாராஷ்டிராவில் 2,02,105 மாதிரிகள் தான் சோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் 2 பேர், திருநெல்வேலி 1 பேர். தமிழகத்தில் தற்போது இறப்பு விகிதம் 0.68 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலேயே இறப்பு விகிதம் குறைவான மாநிலமாக தமிழகம் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தமிழகத்தில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டது, முடிவுகளை அரசு தள்களில் வெளியிடுவது, இறப்பு விகிதத்தை குறைத்தது உள்ளிட்ட தமிழகத்தின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள 80 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை. எந்த அறிகுறியும் இல்லாத ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு வீட்டு கண்காணிப்பில் இருக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் இருப்பவர்களுக்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன. மேலும், அவர்களுக்கு மாஸ்க்கள், ஊட்டச்சத்து மாத்திரைகள், ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த கபசுர குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சிறப்பு பெட்டகம் தமிழகம் சார்பில் வழங்கப்படுகிறது.

வயதில் மூத்தவர்கள், சக்கரை நோய் உள்ளவர்கள், டிபி உள்ளவர்கள், உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
credit