கொரோனாவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதித்து வருகின்றனர். அதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகளே நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவுக்கு எதிரான ஆண்டிவைரலை உடலுக்குள் உருவாக்குகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் கிளியட் சயின்சஸ் (Gilead Sciences) நிறுவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெசிவர் (Remdesivir) மருந்து, கொரோனாவை குணப்படுத்துகிறது என்று தெரிய வந்துள்ளது. அவசர சிகிச்சைக்காக இந்த மருந்தை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (Food and Drug Administration) அனுமதி அளித்தது. இந்தியாவிலும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும் இம்மருந்தை வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஒப்புதல் அளித்தது.
கிளியட் சயின்சஸ் நிறுவனத்திடம் முறையான அனுமதி பெற்று, இந்தியாவைச் சேர்ந்த சிப்லா,ஹெட்டேரோ, மைலான் என்.வி., ஜுப்லியன்ஸ் லைப் சயின்சஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் இந்த மருந்தை உற்பத்தி செய்யத் ஆரம்பித்தன. இவை அனைத்தும் ஜூன் இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சிப்லா நிறுவனம் இந்தியாவில் ரெம்டெசிவர் மருந்தை அறிமுகம் செய்துள்ளது. 100mg அடங்கிய ஒரு மருந்து பாட்டிலின் விலை ரூ.4,000 என்று அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் ரெம்டெசிவர் மருந்தை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது என்று சிப்லாவின் சி.இ.ஒ. நிகில் சோப்ரா அறிவித்தார். இம்மாத இறுதிக்குள் 80 ஆயிரம் மருந்து வயால்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ரெம்டெசிவர் மருந்தை தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே வழங்க முடியும். அனைவருக்கும் இந்த மருந்தை பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.