குட்காவை அவையில் காட்டிய திமுக உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் வழக்கில், இறுதி விசாரணை வரும் ஆகஸ்ட் 13ம் தேதி நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு குட்கா ஊழல் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்ததாக கூறி திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து 21 சட்டமன்ற உறுப்பினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடைவிதித்தது உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி அமர்வில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாரயண் ஆஜராகி உரிமை மீறல் நோட்டீஸ் தடை வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் பதவி காலம் விரைவில் முடிய உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது திமுக தரப்பில் தாங்களும் வழக்கு விசாரணைக்கு தயார் என்றும் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த வழக்கு, நாள் முழுவதும் முழுமையாக விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.