30 8 2022
Educational News: திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசு திங்கள்கிழமை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ திட்டத்துக்காக இணையதளத்தை (www.naanmudhalvan.tn.gov.in) தொடங்கி வைத்து, பல்வேறு துறைகள் மற்றும் பாடங்களில் பயிற்சி, திறன் மற்றும் படிப்புகளை வழங்கும் நிறுவனங்களின் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
பிளாக் செயின், ஐடி-திறன்கள், வங்கி மற்றும் நிதிச் சேவைகள், மொழி நிபுணத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுதல் போன்ற படிப்புகள் இதில் மாணவர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த போர்ட்டலில் சைக்கோமெட்ரிக் சோதனை, புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சிகள் குறைந்த கட்டணத்திற்கு திறன் மேம்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் 47 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மேலும் இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசு வெளியீடு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய போர்டல் மூலம் ரோபோடிக்ஸ், மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐ.ஓ.டி.) போன்ற வளர்ந்து வரும் துறைகளை பற்றி மாணவர்கள் எளிதாக படிக்கலாம் என்று கூறுகிறார்.
தொழில் முனைவோர் மற்றும் ஆளுமை மேம்பாட்டு திறன்களை வளர்ப்பதற்காக, குறிப்பிட்ட பயிற்சி தொகுதிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
மாணவர்கள், கல்லூரியில் படிக்கும்போதே தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த போரட்டலை பயன்படுத்திக்கொள்ளலாம். கல்லூரி மாணவர்களுக்கான இந்த போர்ட்டலில் வழங்கப்படும் IoT போன்ற பாடத்திட்ட உள்ளடக்கங்கள் இலவசம் மற்றும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ‘ஆங்கில தொடர்பு’ அறிமுகப்படுத்தப்படும். ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் படிப்புகள் வழங்கப்படும், என்றார். போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற விரும்புபவர்களும் இணையதளத்தின் அம்சத்தை பற்றி ஒரு பாடம் இப்போர்ட்டலில் இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக இத்திட்டத்தை மார்ச் 1ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது இளைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை கொண்டு வர உதவும் என்று கூறுகிறார்கள்.
‘முதல்வன் திட்டம்’ திறன் மேம்பாடு என்பது, தனிமனித திறமையை அடையாளம் கண்டு அதை வளர்ப்பதை உள்ளடக்கியது.
குறியீட்டு முறை மற்றும் ரோபாட்டிக்ஸ் பற்றிய பயிற்சி அமர்வுகள், வழிகாட்டுதல், ஆளுமை மேம்பாடு மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான வசதி ஆகியவை பற்றின வகுப்புகள் இந்த போர்ட்டலில் அடங்கும். இந்த போர்ட்டலினால் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி முயற்சிகள் மற்றும் தொழில்முறை வழிகாட்டுதல் ஆகியவை மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-government-launced-its-new-portal-for-naan-mudhalvan-502655/